கோவை: பெங்களூரு உணவு விடுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கோவையில் இரண்டு இடங்களில் அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் இரு பயிற்சி மருத்துவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜாஃபர் இக்பால், நகீம் சித்திக் ஆகிய இருவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக உள்ளனர்.
இருவரும் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருவதாகவும் இருவரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாகவும் புலனாய்வு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பெங்களூரு ராமேசுவரம் உணவக குண்டு வெடிப்பு தொடர்பாகவும் தடை செய்யப்பட்ட சில அமைப்புகள் குறித்தும் விவரங்கள் கேட்கப்பட்டதாக என்ஐஏ தெரிவித்தது.
அதிகாலை தொடங்கி காலை 9 மணி வரை நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, அவர்கள் பணியாற்றிய மருத்துவமனையிலும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் இருவரும் புறப்பட்டுச் சென்றதாகவும் விசாரணை நடத்தப்பட்ட பகுதியில் உள்ளூர் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு பயிற்சி மருத்துவர்களுக்கும் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறியும் பொருட்டு விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, பெங்களூரு ராமேசுவரம் உணவகத்தில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இது தொடர்பாக மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

