சென்னை: நாடு தழுவிய அளவில் கல்வித்துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகி வருகிறது என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதாக அறிக்கை ஒன்றில் பள்ளிக் கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறார்களும் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறது.
“கல்வி வளர்ச்சியில் தொடக்க கல்வி மிகமிக முக்கியமானது. அது ஒரு மாளிகைக்கு அடித்தளம் போன்றது. தொடக்கம் சரியாக அமைந்தால் தொடர்ந்து படிக்கும் ஆர்வம் குழந்தைகளிடம் ஏற்படும்,” என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
முதல்வரின் காலை உணவுத்திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம், எண்ணும் எழுத்தும், காடு, மலைப்பகுதி குழந்தைகளுக்கான சிறப்பு வசதி, தொடக்கப் பள்ளிகளில் திறன் மிகு வகுப்பறைகள், மாற்றுத்திறன் மாணவர்கள் மீது தனிக்கவனம் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக பள்ளிக் கல்வித்துறை பட்டியலிட்டுள்ளது.