மழை: 24 பேர் பலி; 91 குடிசைகள், 181 வீடுகள் சேதம்

மழை: 24 பேர் பலி; 91 குடிசைகள், 181 வீடுகள் சேதம்

2 mins read
52c6c959-2d15-4183-855d-ac7d021b8a1d
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49 அடியாகக் குறைந்ததால் முழுமையாகத் தெரியும் நந்தி சிலை. - படம்: ஊடகம்

சென்னை: அண்மைய சில நாள்களாக தமிழகத்தில் பரவலாகப் பெய்து வரும் கனமழைக்கு 24 பேர் பலியாகிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழை குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தும் விதமாக எட்டு மாவட்டங்களில், இரண்டே நாள்களில் 2.66 கோடி கைப்பேசி எண்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் ஒருவாரமாக பரவலாக மழை பெய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மழை காரணமாக 91 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் 181 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 143 கால்நடைகள் இறந்துவிட்ட நிலையில் 13 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் 4,587 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக வருவாய்த்துறை அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

இவ்வாறு மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 90 நீர்த் தேக்கங்களில் தண்ணீர் இருப்பு அவற்றின் கொள்ளளவில் பாதிக்கும் குறைவாக உள்ளது எனத் தெரிய வந்துள்ளது.

வறண்டது அணை; தெரிந்தது சிலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49 அடிக்கு இறங்கியதால் பண்ணவாடி நீர்த்தேக்கப் பகுதியில் மூழ்கியிருந்த ஜலகண்டேசுவரர் கோவில் நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிகிறது.

மேட்டூர் அணையில் மொத்தம் 120 அடி உயரத்திற்கு நீரைத் தேக்கி வைக்க முடியும். அவ்வணையின் நீர்மட்டம் 70 அடிக்குக் கீழ் குறையும்போது, நீர்த்தேக்கப் பகுதியில் மூழ்கியிருக்கும் நந்தி சிலையின் தலைப்பாகம் மட்டும் வெளியில் தெரியும்.

இந்நிலையில், இம்முறை காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரியத் தொடங்கியது. இவ்வாண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 69 அடிக்கு இறங்கியதும் நந்தி சிலையின் தலை வெளியே தெரியத் தொடங்கியது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீர்த் தேவைக்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் 50 அடிக்குக் கீழே சரிந்தது.

இதனையடுத்து, பண்ணவாடி நீர்த்தேக்கப் பகுதியில் மூழ்கியிருந்த 20 அடி உயரம் கொண்ட நந்தி சிலை, அதன் பின்புறம் 10 அடி உயரத்திற்கு ஜலகண்டேசுவரர் கோவிலின் கோபுர முகப்புப் பகுதி வெளியில் தெரியும்படி காட்சியளிக்கிறது.

குறிப்புச் சொற்கள்