சென்னை: தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழர்களைத் திருடர்கள் என்று பழிப்பதை ஒருபோதும் ஏற்க இயலாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை கோட்பாடுகள்,– செயல்திட்டங்கள் மீது ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் பிரதமர் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
பூரி ஜெகன்நாதர் ஆலய பொக்கிஷ அறையின் தொலைந்த சாவி தமிழ்நாட்டில் உள்ளதாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி அவதூறு சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சாவிகள் தொலைந்தது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை என்னவானது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி இருக்கிறார். இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் பூரி ஜெகன்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
“ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா, தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா, தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்? என்று அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளார் தமிழக முதல்வர்.
“தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும் தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும் அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களை திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மீது பழி சுமத்துவதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அந்தந்த மாநிலத்தின் அரசியல் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு தமிழர்கள் மீது அளவற்ற அன்பு, மதிப்பு உள்ளது. அவர் மீது பழி சுமத்துவது கண்டிக்கத்தக்கது,” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.