சென்னை: தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளார் பிரபல யூடியூபர் இர்ஃபான்.
அவரது செயலுக்கு விளக்கம் அளிக்கக்கோரி, தமிழ்நாடு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள மருத்துவக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தெரியாமல் தவறு செய்துவிட்டதாகவும் தன்னை மன்னிக்கும்படி கோரியும் இர்ஃபான் அறிக்கை வெளியிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், மன்னிப்பு கோரினாலும் அவர் மீதான நடவடிக்கை தொடரும் என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
அண்மையில் பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியுடன் துபாய் சென்றிருந்தபோது தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தைப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னர் இத்தகவலைத் தெரிவிக்கும் காணொளி ஒன்றை அவர் வெளியிட்டார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் பிரிவின் மாநில அமலாக்க அலுவலர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சர்ச்சைக்குரிய காணொளியை உடனே யூடியூபில் இருந்து நீக்க வேண்டும் என அந்த அழைப்பாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே இர்ஃபான் செய்தது சரியா, தவறா எனும் கோணத்திலும் சமூக ஊடகப் பக்கங்களில் விவாதம் நடந்து வருகிறது.