குமரி: கன்னியாகுமரி கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான பாம்புகள் தென்படுவதாகக் குறிப்பிட்டு வெளியான காணொளி தென் மாவட்ட மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனினும், இக்காணொளி குமரியில் எடுக்கப்படவில்லை எனத் தமிழக அரசின் உண்மைக் கண்டறியும் குழு தெரிவித்தது.
கடந்த இரு நாள்களாக அக்குறிப்பிட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
கடற்கரை ஒன்றில் குவியல் குவியலாக பாம்புகள் பாறைக் கற்களுக்கு நடுவே ஊர்ந்து செல்வது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
மேலும், இக்காணொளி கன்னியாகுமரியில் எடுக்கப்பட்டது என்று சிலர் வதந்தி பரப்பினர்.
கன்னியாகுமரி கடற்கரைக்குச் செல்லும் மக்கள், அங்குள்ள பாறைகள் மீது அமரும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது சுற்றுலாப் பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தக் காணொளி பகிரப்படுவதற்கு பல நாள்களுக்கு முன்பே பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவலாகப் பரப்பப்பட்டுள்ளது என்று இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மைக் கண்டறியும் குழு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், வெளிநாட்டில் எடுக்கப்பட்ட காணொளியை சிலர் இணையத்தில் மீண்டும் பகிர்ந்துள்ளதாக அக்குழு கூறியுள்ளது.

