திருச்சி: பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபெலிக்ஸ் ஜெரால்டு, தம்மை பிணையில் விடுக்கக் கோரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா, திருச்சி இணையக் குற்றத்தடுப்புக் காவல்துறை தொடுத்த வழக்கில், நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு, மாதந்தோறும் 1ஆம் தேதியும் 15ஆம் தேதியும் திருச்சி இணையக் குற்றத்தடுப்புக் காவல்நிலையத்தில் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும் என்றும் ரூ.20,000 மதிப்பில் இருவர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
எனினும், கோயம்புத்தூர் காவல் நிலையத்திலும் அவர் மீது வழக்கு இருப்பதால், ஃபெலிக்ஸ் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் திருச்சியில் இருந்து கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு மாற்றப்படுவார் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெலிக்ஸ் மீது ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அந்த ஆறிலும் அவருக்குப் பிணை கிடைத்தால்தான் அவர் சிறையில் வெளியே வரும் சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

