சென்னை: கடந்த மே 4 அன்று, அரசியல் விமர்சகரும் யூடியூப் பிரபலமுமான சவுக்கு சங்கரை கோயம்புத்தூர் காவல்துறையினர் தேனியில் கைது செய்தனர். கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து, சென்னை மாநகரக் காவல் ஆணையர் கடந்த மே 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் எனக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தன் மீது காவல்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பல்வேறு வழக்குகளை சட்டவிரோதமாகப் பதிவு செய்து, ஒவ்வொரு நீதிமன்றமாக முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.
“மேலும், காவல்துறை அதிகாரிகள் அவரை சரமாரி தாக்கி உள்ளனர். அதனால் என் மகனின் உடம்பில் பல்வேறு இடங்களில் காயமேற்பட்டுள்ளது. அவருக்கு முறையான சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. காவல்துறையினரால் எனது மகனின் உயிருக்கு ஆபத்து என அவர் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
“என் மகன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டது சட்டவிரோதமானது. பழிவாங்கும் நோக்குடன் உள்நோக்கம் கொண்டது என்பதால் அதை ரத்து செய்து எனது மகனை விடுவிக்க உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் உடனடியாகத் தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டது. அதன்படி, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அசல் ஆவணங்களை காவல்துறை தாக்கல் செய்தது.
அந்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், எதிர்காலத்தில் எப்படி நடந்துகொள்வார் என சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு இறுதி விசாரணையை மே 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் , என்னவெல்லாம் செய்ய மாட்டார் என பட்டியலிட்டு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக முதலமைச்சரை ஒருமையில் அழைத்துள்ளார். இதை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.