தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

3,000 சிலைகள் கடத்தல்; சந்தை மதிப்பு ரூ.40,000 கோடி

1 mins read
9261a6db-4d3e-4848-b9ad-cfb04dd2f2b2
கடந்த 2020ஆம் ஆண்டு லண்டனில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க மூன்று நீதிமன்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பழங்காலச் சிலைகள், கலைப்பொருள்கள் கடத்தல் தொடர்பான வழக்குகள் தேங்கிக் கிடப்பதை தவிர்க்க சென்னை, மதுரை, கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 36,500 கோவில்கள் உள்ளன என்றும் 4.30 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள், கலைப்பொருள்கள் அக்கோவில்களில் இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து ஏறத்தாழ 3,000 சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. அவற்றின் அனைத்துலக சந்தை மதிப்பு ரூ.40,000 கோடியாகும்.

கடத்தப்பட்ட சிலைகளில் சுமார் 2,900 சிலைகள் அமெரிக்க வாழ் இந்தியரான சுபாஷ் சந்திரகபூர் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டுள்ளன. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள சிலைகளைக் கண்டுபிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் சிலை கடத்தல் வழக்குகளை கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மட்டுமே விசாரித்து வந்தது. இதனால் காவல்துறையினர் கடத்தல் தடுப்பு, சிலை மீட்புப் பணிகளில் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டனர்.

இதையடுத்து சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க மேலும் இரண்டு நீதிமன்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்