அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பெருமாநல்லூரில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான இரு கார்களில் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலத்தில் இருந்து கோவை நோக்கி வெள்ளிக்கிழமை (மே 24) காலை தேசிய நெடுஞ்சாலையில் டெல்லி மற்றும் கர்நாடக பதிவு கொண்ட இரண்டு கார்கள் சென்றுகொண்டிருந்தன. திருப்பூர் மாவட்டம் வளசப்பாளையம் பகுதியில் சென்றபோது, கர்நாடகப் பதிவுகொண்ட காரின் முன்பக்க டயர் வெடித்து, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.
பின்னால் சென்ற அடையாளம் தெரியாத பேருந்து, அந்த காரின் மீது மோதியது.
மேலும் பேருந்துக்குப் பின்னால் வேகமாக வந்த டெல்லி பதிவு எண் கொண்ட மற்றொரு காரும் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அடுத்தடுத்து நடைபெற்ற இந்த விபத்தால் பெருமாநல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி பரபரப்பு ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான இருகார்களிலும் வந்த நபர்கள் தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அந்த இரு கார்களிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் மூட்டை மூட்டையாகக் கடத்தி வந்தது தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, இரு கார்களும் பெருமாநல்லூர் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்களை கணக்கிடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

