சென்னை: காவல்துறையில் சிறப்பு தலைமை அதிகாரியாக (டி.ஜி.பி) பணியாற்றிய ராஜேஷ் தாஸ் காவலாளியைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ராஜேஷ் தாஸ், பீலா வெங்கடேசன் ஆகியோர் குடும்பத்துடன் கேளம்பாக்கம் தையூரில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தனர்.
ராஜேஷ் தாஸ், பணியிலிருக்கும்போது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார். இது தொடர்பான வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது.
இந்தச் சூழலில் ராஜேஷ் தாஸும் பீலா வெங்கடேசனும் பிரிந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் எனவும் அவர் மாற்றிக்கொண்டார்.
இந்நிலையில், ராஜேஷ் தாஸ் மீது புதிதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மே 18ஆம் தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்த ராஜேஷ் தாஸ், காவலாளியைத் தாக்கி வெளியேற்றியதாக பீலா வெங்கடேசன் கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த வழக்கில் வெள்ளிக்கிழமை (மே 24) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

