சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை (மே 24) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது புயலாக வலுப்பெற்று பங்ளாதேஷை நோக்கி நகரக்கூடும் என்றும் அந்த மையம் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி, வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடகிழக்குத் திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவியது.
இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் அதே திசையில் நகர்ந்து சனிக்கிழமை (மே 25) புயலாக உருவாகும்.
இதற்கு ஓமன் நாடு ‘ரெமல்’ எனப் பெயர் வழங்கியுள்ளது. இது பங்ளாதேஷ் அருகே தீவிர புயலாகவே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்குச் செல்வதை எச்சரிக்கும் வகையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குற்றாலம் அருவிகளில் குளிக்க மீண்டும் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சில கட்டுப்பாடுகளுடன் வெள்ளிக்கிழமை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்த சில மணி நேரங்களில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
7 நாள்களுக்குப் பின் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அருவிகளில் ஆர்வத்துடன் குளித்து வந்தனர்.
இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

