சென்னை: தமிழகத்திற்கு வரும் நீர்வரத்தை நிறுத்தும் வகையில் கேரள மாநில அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே வட்டவாடா பகுதியில் தடுப்பணை கட்டும் முயற்சியில் ஈடுபடுவது நிறுத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் ஓர் அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட குடிநீர் ஆதாரத்திலும் பாசன பரப்பிலும் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவர் என்று முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர், கேரள முதல்வருக்கு கடிதம் எழுதி, திட்டப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையை ஏற்று, தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

