போக்குவரத்துக் காவலர்களுக்கு எதிராக தொழிற்சங்கக் கூட்டமைப்பு போராட்டம்

போக்குவரத்துக் காவலர்களுக்கு எதிராக தொழிற்சங்கக் கூட்டமைப்பு போராட்டம்

2 mins read
f5c619fc-bfc8-44fb-9625-60bb0cf6dfca
தமிழக அரசின் பொதுப் பேருந்துகளை நிறுத்தி அபராதம் விதித்து வரும் போக்குவரத்துக் காவலர்களைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்க அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. - கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தின் பல இடங்களில் தமிழ் நாடு அரசுப் போக்குவரத்துப் பேருந்துகள் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக போக்குவரத்துக் காவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரியில் அரசுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்த காவலரிடம் பயணச் சீட்டு எடுக்கும்படி கூறியிருக்கிறார் அப்பேருந்தின் நடத்துநர். அதையடுத்து காவலருக்கும் நடத்துநருக்கும் வாக்குவாதம் நடந்தது.

இந்தச் சம்பவம் காணொளியாக சமூக ஊடகங்களில் பரவியது. இதையடுத்து, போக்குவரத்துக் காவலர்கள் திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் பேருந்துகளுக்கு விதிமீறல் தொடர்பாக அபராதம் விதித்து வருகின்றனர்.

விதிமுறைகளை மீறியதாக 18 அரசுப் பேருந்துகள் மற்றும் 7 தனியார் பேருந்துகளுக்கு ஈரோடு வடக்கு போக்குவரத்துக் காவலர்கள் அபராதம் விதித்தனர். இதேபோல், கடலூர் நகர பகுதியில் 4 அரசு மற்றும் 6 தனியார் பேருந்துகள் போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர்.

இந்நிலையில், சீருடையில் செல்லும் காவலரிடம் எப்படி பயணச்சீட்டு எடுக்கச் சொல்லலாம் என காவல்துறையினரும், பிடியாணை வைத்திருந்தால் மட்டுமே காவலர்களுக்கு இலவசப் பயணம் என்று போக்குவரத்துத் துறையினரும் சமூக ஊடகங்களில் வாதிட்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமையும் பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்ந்துள்ளது. இருக்கை வார் அணியவில்லை, சீருடை அணியவில்லை, நிறுத்த கோட்டை தாண்டி நிறுத்துதல், ஒருவழிப்பாதையில் தவறாகப் பேருந்தைச் செலுத்துவது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரசுப் பேருந்தில் காவலர்கள் கட்டணமின்றிப் பயணிக்க அனுமதியில்லை என அறிவித்துள்ளது. மேலும் பணியில் இருந்த நடத்துநருடன் வாக்குவாதம் செய்த காவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், போக்குவரத்துக் காவலர்களைக் கண்டித்து, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை மணப்பாறை பேருந்து நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விதிமுறைகளை மீறியதாகக் கூறி அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறை அபராதம் விதிப்பதைக் கைவிட வேண்டும். போக்குவரத்துக் காவல் துறைக்கு உரிய அறிவுரையை தமிழக அரசு வழங்கவேண்டும் என முழக்கமிட்டனர்.

இதையடுத்து, தமிழக போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திரரெட்டியுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

குறிப்புச் சொற்கள்