சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மக்களின் கவனம் ஈர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகளை வழங்கும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இந்த அன்னதான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பட்டினி இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினத்தன்று அன்னதானம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்றும் கட்சித் தலைவர் விஜய்யின் அறிவுரைப்படி இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்றும் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்திருப்பதாக நடிகர் விஜய் கூறியுள்ளார்.
இதையடுத்து, மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தொடர்ந்து மக்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் உதவித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

