தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட தந்தை, இரு மகன்கள் கைது

தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட தந்தை, இரு மகன்கள் கைது

2 mins read
670a9c9c-4249-4bb4-83b6-169884755a07
சென்னையில் மேலும் சிலரை காவல்துறை விசாரித்து வருகிறது. - படம்: ஊடகம்

சென்னை: தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட குற்றச்சாட்டின் பேரில், சென்னையில் 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

மூவரும் பல இளையர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்காக, பல்வேறு ரகசியக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் அக்கூட்டங்களில் கைதான மூவரும் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், இணையம் வழி சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பரப்பி வருவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

மேலும், ஹமீது உசேனின் தந்தையும் சகோதரரும் அவரது கருத்துகளைப் பரப்புவதில் உதவிகரமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் மூவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

மூவரிடமும் தற்போது கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வரும் நிலையில், மூவரும் பல்வேறு முக்கியத் தகவல்களை தெரிவித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் தகவல்களின் அடிப்படையில், காவல்துறை சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சிலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாக்டர் ஹமீது உசேன் நடத்திய ரகசிய கூட்டங்களில் பங்கேற்றவர்களைப் பற்றிய தகவல்களை காவல்துறை சேகரித்து வருகிறது.

இதன் மூலம் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள மேலும் சிலர் சிக்குவார்கள் என மத்திய குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின்போது கைதான மூவரும் தெரிவித்த மற்ற தகவல்கள் விரைவில் சரிபார்க்கப்படும் என்றும் அதன் பின்னர் மீண்டும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்