தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி

2 mins read
97d77d83-8f87-481a-9a63-2f7337986abc
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு. - படம்: ஊடகம்

சென்னை: இந்திய நாடாளுமன்றத்திற்கான ஏழுகட்டத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், வாக்கு எண்ணும் பணி ஜூன் 4ஆம் தேதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வாக்குகளை எண்ணும் பணியில் 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலின் முதல் கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதியே தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்தத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு மூவடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் குறித்து திரு சாஹு திங்கட்கிழமையன்று (மே 27) செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

“தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில், 43 கட்டடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெறுகிறது. ஓர் அறையில் 14 மேசைகள் போடப்பட்டிருக்கும். அவ்வகையில் மொத்தம் 3,300 மேசைகள் போடப்படும். தேவைப்பட்டால், வாக்காளர்கள் எண்ணிக்கை, பதிவான வாக்குகளின் அடிப்படையில் கூடுதல் மேசைகள் போடப்படும்.

“வாக்கு எண்ணும் பணியில் 10,000 பணியாளர்கள், மின்னணு இயந்திரங்களை எடுத்து வருதல் போன்ற உதவிப் பணிகளுக்காக 24,000 பேர், நுண்பார்வையாளர்களாக 4,500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

“ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும். தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கும். அஞ்சல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரே, இறுதிச்சுற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் எண்ணி இறுதி முடிவு அறிவிக்கப்படும்,” என்று விளக்கினார்.

மேலும், ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணும் பணியும் அதனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் படக்கருவியில் பதிவுசெய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்