நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கரைசுத்துபுதூரைச் சேர்ந்தவர் கேபிகேஜெயக்குமார் தனசிங்.
கட்டடக் குத்தகையாளர் தொழில் செய்து வந்த அவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார்.
மே 4ஆம் தேதி ஜெயக்குமார் தமது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இந்த மரண வழக்கு தொடர்பாக 32 பேருக்கு சிபிசிஐடி காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த 32 பேருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டு உள்ளது.
அந்த 32 பேரும் ஒன்றிரண்டு நாளில் விசாரணைக்கு நேரில் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் இருவரை சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்து உள்ளது.

