பயங்கரவாதம்: தமிழகத்தில் என்ஐஏ தீவிர விசாரணை; தேடுதல் வேட்டை

1 mins read
39dbff6f-e104-4b29-9237-82d819f929fb
என்ஐஏ வளாகம். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த மூன்று பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பும் (என்ஐஏ) தனது விசாரணையைத் தொடங்கி உள்ளது.

அண்மையில் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, ராயப்பேட்டையில் வசித்து வந்த தந்தை, இரு மகன்கள் உள்ளிட்ட மூன்று பேர் கைதாகினர்.

இவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ரகசியமாக ஆள் சேர்த்ததும் பலரை மூளைச் சலவை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இம்மூவருடன் தொடர்பில் இருந்த, சென்னையை சேர்ந்த மேலும் மூவர் சிக்கி உள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை விரிவடைந்துள்ளது என்றும் என்ஐஏ அதிகாரிகளும் தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர் என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி அவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் சிலருக்கு காவல்துறையினர் வலைவீசி உள்ளனர்

தற்போது பிடிபட்டவர்கள், சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் வேறு சில இடங்களிலும் பயங்கரவாத கொள்கை குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்துள்ளனர்.

இதற்கு வசதியாக அறக்கட்டளை ஒன்றை நிறுவியதாகத் தெரிகிறது.

தேசிய புலனாய்வு அமைப்பு, இந்த அறக்கட்டளையின் பணப் பரிமாற்றங்கள் குறித்து விசாரிக்கும் என்றும், அறக்கட்டளையுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றும் என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒட்டுமொத்த நடவடிக்கை குறித்து என்ஐஏ தரப்பில் இருந்து விரிவான அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்