சென்னை: இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற இருக்கிற 57 மக்களவைத் தொகுதிகளில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய பிரதமர் மோடி தேர்வு செய்திருப்பதைவிட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது என்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.
அந்த அறிக்கையில், பதவிக்காக நரேந்திர மோடி எவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்கும் செல்வார் என்பதற்கு இந்தத் ‘தியான நாடகம்’ ஓர் உதாரணமாகும் என்று சாடியுள்ளார்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நரேந்திர மோடி தன்னந்தனியாக தியானம் செய்கிற மூன்று நாள்களும் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ளார்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு பிரதமர் மோடிக்குக் கடுகளவும் சட்டப்படி உரிமை இல்லை என்பதை இங்கே உறுதியாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வது, பாஜகவுக்கு ஆதரவாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக வாக்களிக்கத் தூண்டுகிற பரப்புரையாகவே கருதவேண்டும்.
இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒரு பிரதமரே அப்பட்டமாக மீறுகிற செயலாகும் என்று அந்த அறிக்கையில் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐந்தடுக்கு பாதுகாப்புடன் மூவாயிரம் காவலர்கள் புதன்கிழமை மாலை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். கன்னியாகுமரி முழுவதும் பிரதமரின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி முழுவதும் உள்ள விடுதிகளில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

