சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகளை சேகரித்து ஆதரவற்றோர், முதியோர்களுக்கு வழங்க அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், உலகப் பட்டினித் தினம் என்ற பெயரில் ஒருநாள் மட்டும் உணவு கொடுத்தால் போதாது என்றும் இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
“கட்சித் தலைவர் விஜய்யின் அறிவுறுத்தல்படி, இனிவரும் காலங்களில் கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் நடக்கும் திருமணம், காதுகுத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, அருகில் உள்ள முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கும் உணவு வழங்கப்படும். அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்படுவர்,” என்றார் புஸ்ஸி ஆனந்த்.
திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் 1,000 முதல் 1,500 பேர் வரைக்கும் உணவு தயாரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், சில சமயங்களில் 700 பேர் மட்டுமே விருந்தில் பங்கேற்று சாப்பிடுகின்றனர் என்றார்.
“இதனால் உணவு மீதமாகிறது. பாத்திரங்களைக் கழுவ வேண்டும் என்று கூறி, இரவு 11:00 மணிக்கு குப்பையில் கொட்டுகின்றனர்.
“அதுபோன்று மீதமாகும் உணவுகளை, எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெற்று, ‘பார்சல்’ செய்து எடுத்து சென்று ஆதரவற்றோர், முதியோர், ஏழைகளுக்கு வழங்குவர்,” என்றார் புஸ்ஸி ஆனந்த்.
இதற்காக, திருமண மண்டப மேலாளர்களை தொடர்புகொண்டு, கட்சி நிர்வாகிகள் தங்களின் கைபேசி எண்களை வழங்குவர் என்றும் திருமண மண்டப மேலாளர்கள் அழைத்தால், விரைந்து சென்று உணவுகளை சேகரித்து எடுத்துச் செல்வர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

