கோவை: மாநிலம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் வனத்தை பாழ்படுத்தும் 800 டன் சீமைக் கருவேல மரங்களை வனத்துறையினர் அகற்றியுள்ளனர்.
அண்மைக் காலமாக, இப்பகுதியில் சீமைக் கருவேல மரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் அவற்றை அகற்ற வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதுவரை 800 டன் மரங்கள் வேரோடு அகற்றப்பட்ட நிலையில், இந்தப் பணி நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமையான காடுகளில் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் இருந்து பரவும் அந்நிய தாவரங்கள் இயற்கை சூழலைக் கடுமையாக பாதிக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் கவலைப்படுவதாக ஊடகச்செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், யானை உள்ளிட்ட காட்டுயிர்களுக்குத் தேவையான மரங்கள், செடி, கொடிகள், மூலிகை தாவரங்கள் உள்ளிட்டவற்றை வளரவிடாமல் தடுக்கும் அந்நியச் செடிகளில் முதன்மையாகக் கருதப்படுவது சீமைக் கருவேல மரங்கள்தான் என்றும் ஊடகச்செய்தி தெரிவிக்கிறது.

