கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட பயணமாக வியாழக்கிழமை (மே 30) டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார்.
அதன் பின்னர் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு பயணம் மேற்கொண்டார். அங்குள்ள பகவதி அம்மனை வழிபட்ட பிறகு அவர் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை (மே 31) முதல் விவேகானந்தர் தியான மண்டபத்தில் ஜூன் 1ஆம் தேதி வரை தியானம் செய்யும் பிரதமர் மோடி அன்று மாலை கன்னியாகுமரியில் இருந்து புறப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இந்த சமயத்தில் கன்னியாகுமரியில் இது போன்ற நிகழ்வுகள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் தந்துள்ளார்.
“பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் அதற்கு அனுமதி கோரப்படவில்லை. மேலும் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சி வராது. தனியார் பராமரிப்பில் உள்ள இடத்திற்கு தனிப்பட்ட நிகழ்விற்கு வருவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறத்தேவையில்லை. தேர்தல் விதிமுறைப்படி பரப்புரை மேற்கொண்டாலோ அல்லது கூட்டம் கூட்டினாலோ நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர் விளக்கம் தந்துள்ளார்.

