சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென் தமிழகத்தில் சில பகுதிகளிலும் வியாழக்கிழமை (மே 30) தொடங்கியுள்ளது.
இதனால் தமிழகத்தில் இவ்வார இறுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் ஜூன் 1,2 தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அது தெரிவித்துள்ளது.
ஜூன் 3ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு நிலையம் கூறியது.
சென்னையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வெப்பம் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மற்றும் கடலோரப் பகுதிகளில் அடுத்த சில நாள்களுக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், அதுவரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் நிலையம் எச்சரித்துள்ளது.

