அரசுப் பணி தேர்வு: தமிழில் 40% மதிப்பெண் பெற்றால்தான் மற்ற பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்

2 mins read
f562ccb8-be14-41b7-b4f2-88b1a8c8fc05
சென்னை உயர் நீதிமன்றம். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: அரசுப் பணிக்கான தேர்வுகளில் பங்கேற்போர் தமிழ்மொழி தாளில் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. இவ்வாறு தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசுப் பணிக்காக எழுதப்படும் பொது அறிவு, திறனறிவுத் தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தமிழக அரசு ஏற்கெனவே அரசாணையாக வெளியிட்டு இருந்தது. எனினும் இதை எதிர்த்து நிதேஷ் என்பவர் உட்பட பத்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர். இதை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், அரசாணையை உறுதி செய்து தீர்ப்பு அளித்துள்ளார்.

முன்னதாக தமிழக அரசு சார்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழகத்தில் தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்பதால் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் செவிமெடுத்த நீதிபதி, விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.

“குறிப்பிட்ட பதவிகளை வகிக்கும் அரசு ஊழியர்கள் பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள தமிழ் மொழியில் புலமை பெற்று இருப்பது அவசியம். இது தொடர்பான அரசு தலைமை வழக்கறிஞரின் வாதம் சரியானது தான்,” என்று சுவாமிநாதன் குறிப்பிட்டதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

தமிழ் மொழி தாள் தேர்வில் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தால் மட்டுமே மற்ற பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்றுதான் அரசு நிபந்தனை விதித்துள்ளது என்றும் மாறாக தமிழ் மொழி தாளில் 100% மதிப்பெண் பெற வேண்டும் என்று அரசு வற்புறுத்தவில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட இயலாது என்று குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்