சென்னை: தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கியுள்ளதை அடுத்து, தமிழகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை பொது சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 27,000 பணியாளர்கள் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் மழை பொழிவு இருக்கக்கூடும் என்பதை கவனத்தில் கொண்டு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுவதாக பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.
“பருவ மழை காலத்தில் ‘டெங்கி’, ‘சிக்கன்குனியா’ உள்ளிட்டவை கொசுக்கள் மூலம் பரவும் என்பதை கவனத்தில் கொண்டுள்ளோம். எனவே, நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் தேவை என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“மேலும் மழைகால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைஃபாய்ட் காய்ச்சல் ஆகியவை பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன,” என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


