விருதுநகர்: தூக்கக் கலக்கத்தில் பெண் ஒருவர் விழுங்கிய செயற்கை பல் வரிசையை (பல் செட்) அறுவை சிகிச்சை மூலம் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினா் அகற்றினா்.
இதுகுறித்து விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சீதாலட்சுமி செய்தியாளா்களிடம் கூறுகையில், “விருதுநகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி, 57. இவர் தூக்கத்தில் பல் செட்டை விழுங்கியுள்ளார்.
“இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் கம்பியுடன் கூடிய பல்செட் உணவுக்குழாயின் குறுகலான பகுதியில் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
“இதையடுத்து, உடனடியாக மயக்க மருந்து செலுத்தி, நோயாளிக்கு எந்தவித பாதிப்பும் இன்றி அறுவை சிகிச்சை செய்து செயற்கை பல் வரிசையை அகற்றினா்,” என சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
“தற்போது மூச்சுத்திணறல் சரியாகி உள்ளது. அத்துடன் உணவு உட்கொள்வதிலும் உமிழ்நீரை விழுங்குவதிலும் எந்த சிரமமும் இல்லாமல் சுப்புலட்சுமி நலமாக உள்ளார்.
“எனவே செயற்கை பற்களை பயன்படுத்துவோா் முறைப்படி அவற்றை பராமரிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

