கோவை: மூளைச்சாவு அடைந்த 11 மாதக் குழந்தையின் இதயம் மற்றொரு குழந்தைக்கு மறுவாழ்வு அளித்திருப்பதாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கோவையைச் சேர்ந்த சரவணன் என்பவரது 11 மாதப் பெண் குழந்தை ஆதிரா, வீட்டில் உள்ள நாற்காலியில் அமர்ந்து விளையாடியபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தது.
இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சரவணன் தன் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை ஆதிராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் ஒரு கட்டத்தில் குழந்தை ஆதிரா மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் சரவணனிடம் தெரிவித்தனர். மேலும், உடல் உறுப்பு தானம் குறித்தும் தெரிவித்தனர்.
இதையடுத்து, குழந்தை ஆதிராவின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. குழந்தையின் இதயம், சிறுநீரகம் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு உயிருக்குப் போராடிய ஒரு வயது பெண் குழந்தைக்கு ஆதிராவின் இதயம் பொருத்தப்பட்டது.
இதற்கிடையே, உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட உதவித் தொகையை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், மனித உடல் உறுப்புகள் விற்பனையைத் தடுக்கும் நோக்கத்துடன் உடல் உறுப்பு, திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
“உறுப்புதானம் அளிப்பவர்களுக்கு அறுவை சிகிச்சைக்குப்பின் ஏற்படும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்வதுடன் மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும், ஒரு குறிப்பிட்ட தொகையை உதவித் தொகையாக வழங்க வேண்டும்,” என்று நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

