சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர்.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியிலும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இம்மையங்களில் தலா ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 40 ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், ஆயுதப்படை காவலர்கள், சிறப்புக் காவல்படை காவலர்கள் ஆகியோரும் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய 15 கம்பெனி துணை ராணுவப்படையினரும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே பொது இடங்களிலும் 60 ஆயிரம் காவலர்கள் சுற்றுக்காவல், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.