இந்திய விண்வெளித் துறையில் தனியார் முதலீடுகள்: சென்னை ஐஐடி ராக்கெட் ஏவி சாதனை

2 mins read
a71fb3a5-01ec-4a10-aa4f-2a34eb47350b
விண்வெளித்துறையில் ஈடுபட 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன. - படம்: ஊடகம்

சென்னை: இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்பதன் மூலம் நாட்டுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

மேலும் வருங்காலத்தில் இந்தியாவில் இருந்து குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும்போது பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் உதவியை நாடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இந்தியாவிற்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 2020ஆம் ஆண்டு ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனம் ‘விக்ரம் எஸ்’ என்ற ராக்கெட் ஒன்றை ஏவியதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

விண்வெளித்துறையில் ஈடுபட 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன. இவற்றுள் பல புத்தொழில் நிறுவனங்களும் அடங்கும்.

இந்திய விண்வெளித்துறையின் கீழ் செயல்படும் இன்ஸ்பேஸ் எனப்படும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு, அங்கீகார மையம் தனியார் நிறுவனங்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்து ஆலோசனைகளும் வழங்கி வருகிறது.

இந்நிலையில், நாட்டின் உயர் கல்வி மையங்களில் ஒன்றான சென்னை ஐஐடி (இந்திய தொழில்நுட்ப மையம்) அண்மையில் ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ என்ற புத்தொழில் நிறுவனத்தைத் தொடங்கி அக்னிபன் ராக்கெட்டை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மே 30ஆம் தேதி ஏவியது. அது 5.6 கிலோ மீட்டர் தூரம் சென்றது.

இந்த ராக்கெட் 3டி பிரிண்டட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். அடுத்து ஓராண்டுக்குள் அதிக எடை கொண்ட ராக்கெட்டுகள் வாயிலாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த அக்னிகுல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனால் விண்வெளித்துறையில் ஈடுபடும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அக்னிகுல் நிறுவன ஆலோசகரான பேராசிரியர் சத்தியநாராயணன் ஆர். சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்தில் பல்வேறு நிறுவனங்கள் ரூ.300 கோடி முதலீடு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்