சென்னை: வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து உள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 மக்களவைத் தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியாகவும் நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டன. ஏறத்தாழ 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாகப் பதிவான வாக்குகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது.
தமிழ்நாட்டிலும் காலை 8 மணிக்கு அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கும்.
“வாக்கு எண்ணிக்கைக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பொது பார்வையாளர்கள் தமிழகம் வந்துள்ளனர். வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் கடைசி சுற்றுக்கு முன்பாக தபால் வாக்கு முடிவு வெளியிடப்படும்,” என்று சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஒவ்வொரு சுற்றுக்கும் வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவிக்கப்படும். வாக்கு எந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளின் கடைசிச் சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குகளின் எண்ணிக்கை வெளியாகும். வாக்கு எண்ணும் மையங்களில் எந்தவிதமான பிரச்சினைகளும், ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
வாக்கு எண்ணிக்கையின்போது தமிழகம் முழுவதும் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 15 கம்பெனி துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் இணைவர்.இதற்கிடையே, தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையின்போது மின்சாரத் தடை ஏற்படாதிருக்க எல்லா ஏற்பாடுகளையும் தயார்நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதிசெய்ய வேண்டும் என்றும் துணை மின் நிலையங்களில் குறைபாடுகள் இருப்பின் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“அவசரகால செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால், மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்று தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.