கட்டண உயர்வு நடப்புக்கு வந்தது: 36 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம்

1 mins read
aa205cda-5c4e-44e7-9f9b-8d9b38826b29
ஏப்ரல் மாதம் அமலுக்கு வரவேண்டிய கட்டண உயர்வு தாமதமடைந்தது. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: சுங்கச்சாவடிக் கட்டண உயர்வு தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வந்து உள்ளது.

மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 1992ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும் 2008ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட வேண்டிய சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதன் பிறகு மக்களவைத் தேர்தல் நடந்ததால் கட்டண உயர்வு கடைப்பிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்தக் கட்டண உயர்வு திங்கட்கிழமை (ஜூன் 3) முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.70, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.110, மாதாந்திரக் கட்டணம் ரூ.2,395.

இலகுரக சரக்கு வாகனங்கள் சிற்றுந்துகளுக்கு ஒருமுறை பயணம் செய்ய ரூ.115, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.175, பேருந்து, சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.245, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.365 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்