புதுடெல்லி: பல்வேறு அமைப்புகளின் அரசுத்துறைகளுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் காரணமாக இண்டியா கூட்டணிக்கு வெற்றி கிடைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூன் 4ஆம் தேதி மாலை செய்தியாளர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
அப்போது, அரசமைப்புகள், நீதித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு எதிராக கடுமையாகப் போராடியதாக அவர் குறிப்பிட்டார்.
“இந்திய அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்காக தேர்தலைச் சந்தித்தோம். எதிர்க்கட்சிகளில் பலவற்றை இரண்டாக உடைத்தது பாஜக.
“பிரதமர் மோடியை விரும்பவில்லை என்பதையே தேர்தல் முடிவு காட்டி உள்ளது. எங்களது வங்கிக் கணக்கை முடக்கியதோடு, பல மாநில முதல்வர்களை கைது செய்து சிறை வைத்தது பாஜக.
“நான் போட்டியிட்ட வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் எதை ராஜினாமா செய்வது என இன்னும் முடிவு செய்யவில்லை. உத்தரப் பிரதேசத்தில் மக்கள் சிறப்பான செயலைச் செய்து முடித்துள்ளனர்,” என்றார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “இது பிரதமர் மோடிக்கு தார்மிக மற்றும் அரசியல் ரீதியிலான தோல்வி” என்று குறிப்பிட்டார்.