இண்டியா கூட்டணி நாட்டை வழிநடத்தும் பணியை மேற்கொள்ளும்: ஸ்டாலின்

இண்டியா கூட்டணி நாட்டை வழிநடத்தும் பணியை மேற்கொள்ளும்: ஸ்டாலின்

1 mins read
006a5918-f4cf-4604-9927-7be53c41694c
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகம், புதுவையில் உள்ள நாற்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணி பெற்றுள்ள வெற்றியானது, இந்திய அரசியலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத்தான் தனிப்பெரும்பான்மை பெற முடியாத பாஜகவின் சரிவு காட்டுகிறது என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார.

“தங்களின் கோட்டை என நினைத்திருந்தவர்களின் மாநிலங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் சரிக்குச் சரியாக இண்டியா கூட்டணியின் உறுப்பினர்கள் இடம் பெறவிருப்பது ஜனநாயகம் கட்டிக் காக்கப்பட்டிருப்பதன் அடையாளமாகும்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் தமிழகத்திலும் இந்திய அளவிலும் இண்டியா கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இண்டியா கூட்டணி மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

அங்கு அவர் முன்வைக்கும் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என திமுக மூத்த பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்