சென்னை: மக்களவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில், நாம் தமிழர் கட்சி 8.19 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி எனும் மதிப்பைப் பெற, சட்டப்பேரவைத் தேர்தலில் 6 விழுக்காடு வாக்குகளுடன் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம். இல்லையெனில், மக்களவைத் தேர்தலில் 6 விழுக்காடு வாக்குகளுடன் ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும்.
இல்லையெனில் மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 8 விழுக்காடு, அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் 3% பெற வேண்டும் என்பது விதிமுறையாகும்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் 8% வாக்குகளைப் பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி. இந்த மக்களவைத் தேர்தலில் 8.19 விழுக்காடு வாக்குகளைப் பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்சி எனும் அந்தஸ்தைப் பெற்றிருப்பது அக்கட்சியினர் இடையே உற்சாகம் அடைய வைத்துள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 35.60 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. மேலும் 12 தொகுதிகளில் அக்கட்சி ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உயர்ந்துள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் அக்கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரு தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட்டது. இரு தொகுதிகளிலுமே அக்கட்சி வெற்றி பெற்றதையடுத்து அதற்கு மாநில அந்தஸ்து கிடைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த முறை தனி சின்னத்தில், ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டதால் அக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

