சென்னை: மக்களவைத் தேர்தலில், தான் போட்டியிட்ட தொகுதியில் தன் பெயரைக் கொண்ட நான்கு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டது தனது தோல்விக்கு முக்கிய காரணமாகிவிட்டது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையைக் கைப்பற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன.
இதையடுத்து, அதிமுக அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதிமுகவை விட்டு நீக்கப்பட்ட நிலையில் மக்களவைத் தேர்தலின்போது பாஜக தலைமையும் அவரை கைவிட்டது.
பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி மட்டுமே அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் கேட்ட இரண்டு தொகுதிகள்கூட ஒதுக்கப்படாத நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.
இதேபோல் அமமுக என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வரும் டிடிவி தினகரனும் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.
அமமுகவிற்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கியது பாஜக தலைமை. ஆனால் தேனி தொகுதியில் போட்டியிட்ட தினகரன், அவரது அரசியல் சீடர் எனக் கருதப்பட்ட தங்க தமிழ்ச்செல்வனிடம் தோல்வி அடைந்துள்ளார்.
இதனால் அவர் கட்சியினர் மிகுந்த சோர்வுக்கு ஆளாகி உள்ளனர். ஓ.பன்னீர்செல்வமும் தினகரனும் தங்களது ஆதரவாளர்களுக்கு மீண்டும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.