அ.தி.மு.க.வை மக்கள் நிராகரித்து விட்டனர்: அண்ணாமலை

2 mins read
3b2f4b65-e971-4aa7-b6a5-0348d45e1f89
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை. - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் அ.தி.மு.கவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “2024 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்திருந்தால் 30 முதல் 35 இடங்கள் கிடைத்திருக்கும் என்று எஸ்.பி.வேலுமணி கூறியிருக்கிறார். தனியாக இருந்தே அ.தி.மு.க. ஒரு தொகுதியைக்கூட பெறவில்லை. அப்படியிருக்கும்போது ஒன்றாக இருந்திருந்தால் 35 இடங்களில் வெற்றி பெற்று இருக்கும் என்று எப்படி அவர் சொல்கிறார்,” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.

அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை.

கடந்த தேர்தலில் இணைந்து களம் கண்ட அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இந்த தேர்தல் தொடங்குவதற்கு முன்பு தனித்தனி பாதையில் பயணம் செய்தன. இந்த நிலையில் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இணைந்து தேர்தலைச் சந்தித்து இருந்தால் அதிகளவில் வெற்றி கிடைத்து இருக்கும் என்ற பேச்சு அடிபடுகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. தலைவர்களை தமிழக மக்கள் நிராகரித்து விட்டனர் என்பது தான் தேர்தல் தரும் பாடம். வருகிற 2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

இதற்கிடையே பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் அண்ணாமலை அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாகவும், தேர்தலில் சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, கட்சி தலைமையிடம் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அண்ணாமலை மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இது.

குறிப்புச் சொற்கள்