‘பாமகவுக்கு தேர்தல் களம் சாதமாக உள்ளது’

2 mins read
667e43d1-044e-44e4-90fb-b1758c93cb5e
பாட்டாளி மக்கள் கட்சி பல சரிவுகளைச் சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு வந்துள்ளது என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தேர்தலில் வெற்றியை இழந்தாலும் தேர்தல் களம் சாதகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

“தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி சாத்தியமாகவில்லை. வெற்றியை சுவைக்க முடியாதது எப்போதுமே வருத்தமளிக்கும் ஒன்றுதான். இருந்தாலும், இதில் ஏமாற்றமோ, கவலையோ அடைவதற்கு எதுவுமில்லை. இந்தத் தேர்தல் போரில் நாம் வெற்றியை இழந்திருக்கலாம், ஆனால் களத்தை இழக்கவில்லை. களம் இன்னும் நமக்கு சாதகமாகவே இருக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் உழைத்த தொண்டர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

“தொண்டர்களின் உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உங்கள் உழைப்புக்கு இப்போது பயன் கிடைக்கவில்லை என்றாலும் இரு ஆண்டுகளில் நிச்சயம் பலன் கிடைக்கும்,” என்றார் அவர்.

“மக்களவைத் தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு, இது இப்படி இருந்திருந்தால், அது அப்படி நடந்திருக்கும் என்பன போன்ற யூகங்கள் தேவையில்லை. காரணம் இந்தத் தேர்தலுக்கு முன்பாகவே நமது இலக்கு மக்களவைத் தேர்தல் அல்ல, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தான் என்பதை தெளிவுபடுத்தியிருந்தோம்.

“பாட்டாளி மக்கள் கட்சியின் அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான அணியை கட்டமைத்து போட்டியிடுவதும், வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதும் தான் நமது இலக்கு. அந்த இலக்கை நோக்கித் தான் நாம் வீறுநடை போட வேண்டும்.

“2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒரு விஷயத்தை தெளிவாகக் காட்டுகின்றன. ஆளும் தி.மு.க. அதன் அதிகார வலிமை, பண வலிமை, படை வலிமை ஆகிய அனைத்தையும் பயன்படுத்தினாலும்கூட, அதன் வாக்கு வங்கி 2019 தேர்தலைவிட கிட்டத்தட்ட ஏழு விழுக்காடு குறைந்திருக்கிறது. ஆண்ட கட்சியான அ.தி.மு.க. கடந்த தேர்தலை விட மூன்றில் ஒரு பங்கு இடங்களில் கூடுதலாக போட்டியிட்டு இருந்தாலும் கூட, அந்தக் கட்சியால் 2019ல் பெற்ற வாக்கு வங்கியை அதிகரிக்க முடியவில்லை. இன்னும் கேட்டால் 2021 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 13 விழுக்காடு குறைவாகவே பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளும் இல்லாத ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் விரும்புவதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதை அனைவரும் உணர வேண்டும்; மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்ற உழைக்க வேண்டும். அதைத் தான் பா.ம.க. செய்யப்போகிறது,

“தமிழ்நாட்டு அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சி பல சரிவுகளை சந்தித்தாலும், அவற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. இப்போதும் அதேபோல் மீண்டு வருவோம். அதில் உங்களுக்கு எந்த ஐயமும், கவலையும் தேவையில்லை.

“2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் நமக்கு சாதகமாக இருக்கிறது; மக்கள் நம்மை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். நானும் முதல் ஆளாக இருந்து உங்களை வழிநடத்த காத்திருக்கிறேன்,” என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்