கோவை: கோவையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கென்யாவைச் சேர்ந்த பெண்ணும் இந்தியாவைச் சேர்ந்த சிலரும் கைதாகி உள்ளனர்.
கல்லூரி மாணவர்களையும் இளையர்களையும் குறிவைத்து போதைப்பொருள் கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.
உயர் ரக போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபட்டிருப்பது குறித்து கோவை காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, விசாரணை தீவிரமடைந்தது.
உடனடியாகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டையில் முழு மூச்சாக காவல்துறையினர் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக, 102 கிராம் போதைப்பொருள், ஒரு கிலோ கஞ்சாவுடன் கோவையில் ஆறு இளையர்கள் கைதாகினர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, கோவையைச் சேர்ந்த வினோத் என்பவர் மூலம் போதைப்பொருளைப் பெற்றது தெரிய வந்தது.
ஒரு வாரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு வினோத் சிக்கினார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த அவருக்கு, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவர்தான் போதைப்பொருள்களை விநியோகம் செய்து வந்துள்ளார்.
பிரவீன் பெங்களூரில் வாடகைக் கார் ஓட்டுநராக இருப்பது தெரிய வந்த நிலையில், அவரைத் தமிழக காவல்துறையினர் நேரில் சென்று கைது செய்தனர்.
இவ்வாறு போதைப்பொருள் விநியோகச் சங்கிலி நீண்டு கொண்டே இருந்த நிலையில், குறிப்பிட்ட கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தினால் போதைப்பொருள் கிடைக்கும் என்று பிரவீன் தெரிவித்தார்.
அதன்படி, காவல்துறையினர் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை ‘ஆர்டர்’ செய்தனர். அந்தக் கைப்பேசி எண்ணை வைத்து, அதன் பதிவு விவரங்கள், அதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணப்பரிமாற்றங்கள் குறித்து முக்கியமான தகவல்கள் கிடைத்தன.
அந்தக் கைப்பேசி, உகாண்டாவைச் சேர்ந்த இமான் தலேம்வா என்பவர் பெயரில் பதிவாகி இருந்தது. அவர் டெல்லியில் படிக்க வந்தார் என்பதும் படிப்பை முடித்து சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட்டதும் தெரிய வந்தது.
எனினும், அவரது கைப்பேசி எண்ணையும் வங்கிக்கணக்கையும் கென்யாவைச் சேர்ந்த ஐவி போனுங்கே என்ற பெண் பயன்படுத்தி வந்துள்ளார். அவர் பெங்களூரில் தங்கி சட்டப்படிப்பை மேற்கொண்டுள்ள மாணவி என்பதை அறிந்த காவல்துறையினர், ஐவி போனுங்கேவைச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அம்மாணவி ஓராண்டுக்குள் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்களை விற்றுள்ளார்.
இவரது காதலர் ஏவியன் போங்கே பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடியே கடத்தல் கும்பல் தலைவரைப் போல் செயல்பட்டு வந்த இவரை ஐவி போனுங்கே பலமுறை சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது ஏவியன் போங்கே பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு ஏற்ப போதைப்பொருள்களை ஐவி போனுங்கே விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
ஏவியன் போங்கேவிடம் இருந்து இரண்டு கைப்பேசிகளை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு பொது இடங்களுக்கு வரவழைத்து போதைப்பொருளை விற்று வந்துள்ளார் ஐவி.
அவருக்கு கென்யாவைச் சேர்ந்த சிலர் உதவியதாகக் கூறப்படுகிறது.
கைதான ஐவியின் காதலரை சிறையில் வைத்து கோவை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். மேலும் போதைப்பொருள் விற்பனை, விநியோகத்துக்கு உதவிய வினோத், பிரவீன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

