சுயேச்சை வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிய நோட்டா

சுயேச்சை வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிய நோட்டா

2 mins read
b6d60f8d-13eb-4dc8-b5eb-f19fc19d6519
நோட்டா. - சித்திரிப்புப்படம்.

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் ஒரு சுவாரசியம் நடந்துள்ளது.

அத்தொகுதியில் திமுக, அதிமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேலும் சுயேச்சைகளாகவும் சிலர் களமிறங்கினர்.

மொத்தம் 28 பேர் வெற்றிக்குப் போராடிய நிலையில், திமுக வேட்பாளர் கனிமொழி கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மற்ற 27 வேட்பாளர்களும் தேர்தல் வைப்புத்தொகையை இழந்தனர்.

இந்நிலையில், நோட்டா வாக்குகளாக 9,806 வாக்குகள் பதிவாகின. இதன் மூலம் வாக்குப்பட்டியலில் நோட்டாவுக்கு ஐந்தாம் இடம் கிடைத்துள்ளது.

23 வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது நோட்டா.

இதேபோல் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியிலும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 14,000 வாக்குகளைப் பெற்றது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இம்முறை இத்தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ, அதிமுக வின் கருப்பையா உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அமமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் கணிசமான வாக்குகளைப் பெற்ற நிலையில் மற்ற வேட்பாளர்கள் ஆயிரம், இரண்டாயிரம் என சொற்ப வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. இந்நிலையில் செல்வராஜ் என்ற சுயேச்சை வேட்பாளர் 14,796 வாக்குகளைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தல் களத்தில் இவரை விட பல சுயேச்சைகள் அதிகம் செலவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் செலவு செய்யாமலேயே சுயேச்சை வேட்பாளரான செல்வராஜ் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். வாக்குப் பட்டியலில் இவருக்கு 5 ஆம் இடம் கிடைத்துள்ளது. இவருக்கு அடுத்த படியாக நோட்டாவுக்கு 13,849 வாக்குகள் கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்