சென்னை: தமிழகத்தில் இருந்து மூன்று பேருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய மூவரும் மத்திய அமைச்சரவையில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜகவால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
எனினும் சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன், கவனிக்கத்தக்க வகையில் அதிக வாக்குகளும் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழக பாஜகவுக்குப் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
காவல்துறை முன்னாள் அதிகாரி பொன் மாணிக்கவேல் மாநிலத் தலைவராக நியமிக்கப் படுவார் என தமிழக பாஜகவினர் இடையே வெள்ளிக்கிழமை குறுந்தகவல்கள் பரப்பப்பட்டன.
மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோரில் ஒருவர் மாநிலத் தலைவர் ஆவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.

