யூடியூப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து நீட் தேர்வில் சாதித்தார்

1 mins read
c2384a9f-c897-415a-ae65-06cd90bbddfc
மாணவன் சஞ்சய். - படம்: ஊடகம்

திருப்பூர்: தனியார் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல் யூடியூப் தளத்தில் வெளியான பயிற்சி காணொளிகளைப் பார்த்து நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் ஒரு மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தார் மாணவர் சஞ்சய். நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க வேண்டும் என்பது சஞ்சயின் கனவாக இருந்தது.

இவரது தந்தை அரிசிக் கடை வைத்துள்ளார். இந்நிலையில் தனியார் பயிற்சி மையங்களுக்குச் செல்லாமலேயே நீட் தேர்வை எதிர்கொள்ள விரும்பியுள்ளார் சஞ்சய்.

இணையத்தில் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றனவா என விவரங்களைத் தேடியதன் பலனாக யூடியூப் தளத்தில் வழங்கப்படும் நீட் பயிற்சி குறித்து கேள்விப்பட்டார் சஞ்சய்.

இதையடுத்து அந்தப் பயிற்சி வகுப்புகளைப் பின்பற்றி வந்துள்ளார். இதன் பலனாக 720 மதிப்பெண்களுக்கு நடைபெறும் தேர்வில் 687 மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார் சஞ்சய்.

தன்னுடைய இந்த வெற்றிக்கு ஊக்கமளித்த பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்த அவர் தன்னைப் போலவே மற்ற மாணவர்களும் விடா முயற்சியுடன் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

நடப்பாண்டில் நாடு முழுவதும் 25 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியதாகக் குறிப்பிட்ட அவர், முதல் முயற்சியிலேயே 687 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தது மனநிறைவு தருவதாக கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்