சென்னை: திமுக மக்களவை உறுப்பினர்கள் தமிழக மக்களுக்கு மிகமிக உண்மையாக இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தங்களது முழக்கங்களால் பாஜகவை செயல்பட வைக்க வேண்டும் எனவும் திமுக எம்பிக்களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து வாதாடுவதும் போராடுவதும் திமுக எம்பிக்களின் பொறுப்பு என்றார்.
“பலவீனமாக உள்ள பாஜக அரசை முழக்கங்களின் மூலமாக செயல்பட வைக்க வேண்டியது உங்கள் கடமை. 370 தொகுதிகளில் வெற்றி பெறுவோம், 400 தொகுதிகளைப் பெறுவோம் என்றெல்லாம் சொல்லி 240 தொகுதிகளை மட்டுமே பாஜக பெற்றுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின்படி செயல்பட்டு பலவீனமான பாஜக அரசை செயல்பட வைக்க வேண்டும்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த முறை எதிர்க்கட்சி வரிசையில் கூட்டம் குறைவாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், இம்முறை 234 எதிர்க்கட்சி எம்பிக்கள் இருப்பார்கள் என்றார்.
ஒரு வகையில் பாஜகவுக்கு சரிக்கு சமமாக இண்டியா கூட்டணி எம்பிக்கள் இருப்பார்கள் என மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையே, நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு விவகாரத்தை திமுக எம்பிக்கள் எழுப்புவார்கள் என்றும் மற்றொரு தீர்மானம் கூறுகிறது.

