2026ல் மாநில ஆட்சி: சீமான் நம்பிக்கை

1 mins read
3be4b01f-8b13-41a7-ae04-e5eb5c39f1b5
சீமான். - படம்: ஊடகம்

சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் மாநிலக் கட்சிக்கான அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சி பாய்ச்சல் என்று தமது சமூக ஊடகப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டுதான் நாம் தமிழர் கட்சி முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டது என்றும் எட்டே ஆண்டுகளில் மாநிலக் கட்சியாக உயர்ந்துள்ளது என்றும் சீமான் கூறியுள்ளார்.

சின்னம் பறிப்பு, அதிகார முறைகேடு, அரசியல் நெருக்கடி எனப் பல்வேறு அடக்குமுறைகளை நாம் தமிழர் கட்சி கடந்து சாதி, சமயம், மது, பணம் எனப் புரையோடிப்போன சமூக தீங்குகளையும் கட்சி கடந்து வந்துள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.

“நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் பெற்றுள்ள வாக்குகள் பெரும் ஜனநாயக மறுமலர்ச்சி ஆகும். இத்தேர்தலில் வெற்றி என்ற இலக்கை அடைய முடியாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது பெரும் மகிழ்வைத் தருகிறது,” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

மாநிலக் கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாகக் கொண்டு, எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க உறுதி ஏற்போம் என்றும் சீமான் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்