ரூ.1,500க்கு வாங்கப்பட்ட குழந்தை ரூ.2.5 லட்சத்துக்கு விற்பனை: ஐவர் கைது

2 mins read
eef15a00-f85f-4e8a-b4e9-006048e15f00
குழந்தை விற்பனை தொடர்பில் கைதானவர்கள். - படம்: தமிழக ஊடகம்

கோவை: பிறந்த 15 நாளே ஆன பெண் குழந்தையை பீகாரில் ரூ.1,500 வாங்கி, கோவையில் ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்த பீகாரை சேர்ந்த மகேஷ்குமார்- அஞ்சலிதேவி தம்பதி பீகாரிலிருந்து குழந்தைகளை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து பீகாரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 வயது ஆண் குழந்தை, பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை ஆகியோரை மீட்ட காவல்துறையினர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பெண் குழந்தையை வாங்கியதாக சனிக்கிழமை (ஜூன் 8) திம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு கடந்த 17 ஆண்டுகளாக குழந்தை இல்லை. அவரிடம் பழகிய அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதி தங்கள் வசம் பிறந்து 15 நாள் ஆன ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும், அது பீகாரில் இருப்பதால் இரண்டரை லட்சம் பணம் கொடுத்தால் அவர் பெயருக்கு ஆதார் கார்டுடன் பிறப்புச் சான்றிதழுடன் குழந்தையைப் பெற்றுத் தருவதாக கூறி உள்ளனர்.  இதற்கு விஜயன் சம்மதம் தெரிவிக்க, அஞ்சலி பீகாரில் உள்ள தனது தாயார் பூனம் தேவிக்கு (61) தகவலை சொல்லி உள்ளார். பூனம் தேவியும் அவரது இளைய மகள் மேக குமாரியும் (21) 20 நாள்களுக்கு முன் பீகாரில் இருந்து பிறந்து 15 நாட்கள் ஆன பெண் குழந்தையை சூலூர் கொண்டு வந்து அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியிடம் கொடுத்து உள்ளனர்.

அவர்கள் விஜயன் குடும்பத்தாருக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் வாங்கி உள்ள நிலையில் இன்னும் 70 ஆயிரம் ரூபாய் வர வேண்டி உள்ளது. 

இந்நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக சூலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ‘சைல்ட் லைன்’ அமைப்பிற்கு தகவல் கொடுத்து உள்ளார். குழந்தை விற்பனையை உறுதி செய்த அவர்கள் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பூனம்தேவி, மேகாகுமாரி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்