திருச்சி புதிய விமான நிலைய முனையத்தில் முதல் சிங்கப்பூர் விமானம்

திருச்சி புதிய விமான நிலைய முனையத்தில் முதல் சிங்கப்பூர் விமானம்

2 mins read
a93977e0-8496-4cac-80da-426b5337d864
புதிய முனையத்தில் ஒரேநேரத்தில் 3,000 பயணிகளைக் கையாள முடியும். - படம்: தமிழக ஊடகம்

திருச்சி: திருச்சியில் ஏறக்குறைய ரூ.1,112 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய விமான நிலைய முனையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

புதிய முனையத்தில் ஆண்டுக்கு 4.5 மில்லியன் பயணிகளைக் கையாள முடியும். அத்துடன், ஒரே நேரத்தில் 10 விமானங்களில் வந்து செல்லும் பயணிகளைக் கையாளும் திறன்கொண்டது அந்தப் புதிய முனையம்.

ஒரு மணி நேரத்தில் 12 விமானங்கள் தரையிறங்கியும் புறப்பட்டும் செல்லும் வசதிகள் உள்ளன. 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 240 விமானங்கள் வந்து செல்லும் வகையில் தொழில்நுட்ப வசதி இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

75,000 சதுர மீட்டா் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ள புதிய முனையத்தில் ஏறக்குறைய 1,000 காா்கள், 10 பேருந்துகளை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

புறப்பாடு மற்றும் வருகைக்காக 10 ஏப்ரான்கள், ஏரோபிரிட்ஜ்கள் ஆகியவற்றோடு குடிநுழைவுப் பிரிவு உள்ளிட்ட (இமிகிரேஷன்) தலா 40 முகப்புகளும் முக்கியப் பிரமுகா்கள் தங்க மூன்று அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பயணிகளின் உடைமைகளை எடுத்து வர கண்காணிக்கும் 15 ஊடுகதிர் இயந்திரங்களுடன் கூடிய சாய்வுதள ‘கன்வேயா் பெல்ட்’ சாதனம் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மூலம் 10 விமானங்களில் வருகை தரும் மற்றும் புறப்பட்டுச் செல்லும் சுமாா் 3,000 பயணிகளை ஒரே நேரத்தில் கையாள முடியும்.

அதிநவீன வசதிகளுடன்கூடிய கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்திய கோபுரம் மூலம் விமான ஓடுதளத்தில் எந்த ஒரு பகுதியையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும்.

புதிய முனையம் கட்டுவதற்கான திட்டத்தை 2019ஆம் ஆண்டு காணொளி வாயிலாக பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார்.

புதிய முனையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7.25 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் தரையிறங்கியது. புதிய முனையத்தில் சென்று இறங்கிய முதல் அனைத்துலக விமானம் அது.

அதே போல திருச்சியிலிருந்து இலங்கை தலைநகா் கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் புதிய முனையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற முதல் அனைத்துலக விமானமாக இருக்கும்.

முன்னதாக, சென்னையில் இருந்து முதல் உள்நாட்டு விமானம் புதிய முனையத்தில் சென்று இறங்கியது.

திங்கட்கிழமை வரை பன்னாட்டு விமான நிலையமாக செயல்பட்டு வந்த திருச்சி பழைய விமானநிலையம் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்