தமிழகம் முழுதும் நீட் தேர்வுக்கு எதிராக வலுக்கும் மாணவர்கள் போராட்டம்

தமிழகம் முழுதும் நீட் தேர்வுக்கு எதிராக வலுக்கும் மாணவர்கள் போராட்டம்

2 mins read
76db7dba-1a17-499a-bbf6-f1f1b2bd346e
சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் குதித்துள்ளனர். - படம்: ஊடகம்
multi-img1 of 2
Google News Preferred Icon

சென்னை: நீட் தேர்வுக் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டியும் நீட் தேர்வை முற்றிலும் ரத்துச் செய்யுமாறு வலியுறுத்தியும் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சியில், தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை மாணவர் சங்கத்தின் தலைவர் சூர்யா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில், மாணவர்கள் சாலைகளில் அமர்ந்து குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களைக் கைது செய்ய முனைந்தனர். அப்போது, கட்டுக்கடங்காத மாணவர்கள் அஞ்சல் அலுவலகத்திற்கு முன் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளைத் தாண்டிக் குதித்து உள்ளே செல்ல முயன்றனர்.

பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள், போராட்டக்காரர்களை அஞ்சல் அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். அதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சுமார் பத்து நிமிட போராட்டத்துக்குப் பிறகு காவலர்கள் நான்கு மாணவிகள் உட்பட 11 பேரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களை காவல்துறை அப்புறப்படுத்த முயற்சி செய்த போது மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய துறைகளில் இளநிலை மருத்துவக் கல்வி பயில, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தத் தேர்வின் மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. 4,750 மையங்களில் நடந்த இந்தத் தேர்வை 23 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இந்த நிலையில் தேர்வு முடிந்த ஓரிரு நாட்களிலேயே நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்தத் தகவல்களை மறுத்த தேசிய தேர்வு முகமை, எந்த ஒரு வினாத்தாளும் கசியவில்லை. சமூக ஊடகப் பதிவுகள் எல்லாமே அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்திருந்தது. ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் கணக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் குளறுபடிகள் நடைபெற்று உள்ளது என்றும் அதனால் அந்தத் தேர்வு செல்லாது என்று அறிவித்து மறு தேர்வு நடத்த வேண்டும் எனக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கு தொடர்பாக, தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத், அசாதுதீன் அமானுல்லா அமர்வு ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
நீட் தேர்வுபோராட்டம்மாணவர்கள்