மதுரை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் வளா்ப்புத் தந்தைக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
மதுரையைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் கணவா் பிரிந்து சென்ற நிலையில், தனது இரு குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தாா். பின்னர், செல்வகுமார் என்பவரை அந்தப் பெண் திருமணம் செய்து கொண்டாா். கடந்த 2020ஆம் ஆண்டு அந்தப் பெண்ணின் 8 வயது மகளுக்கு செல்வகுமார் பாலியல் தொந்தரவு கொடுத்தாா்.
இதுதொடா்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், 2021ஆம் ஆண்டு தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல்துறையினர், செல்வகுமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமாரவேல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) தீர்ப்பளித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட செல்வகுமாருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சாா்பில் ரூ. 6 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டாா்.
இந்நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் ஓட்டுநர் ஒருவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளது.
ஜெயபாக்கியம் என்னும் அந்த 22 வயது ஆடவர் அருப்புக்கோட்டை தாலுகா பாளையம்பட்டியைச் சேர்ந்தவர். 17 வயது சிறுமியுடன் பழகி, திருமணம் செய்வதாகக் கூறி காரில் கடத்திச் சென்று அச்சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆடவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அருப்புக்கோட்டை மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் ஜெயபாக்கியத்தைக் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை முடிவுற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிறுமியை காரில் கடத்திய குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதம், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ, 10 ஆயிரம் அபராதம் என மொத்தம் 30 ஆண்டு தண்டனை விதித்தும் அதனை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டு நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.

