தஞ்சாவூா்: அதிமுகவுடன் இணையும் எண்ணம் இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.
தஞ்சாவூரில் புதன்கிழமை (ஜூன் 12) செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து 10 தேர்தலில் அதிமுக தோல்வி கண்டுள்ளது.
“எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக என்ற மாபெரும் இயக்கம் சரியான தலைமை இல்லாததால் பலவீனம் அடைந்துள்ளது.
“அமமுக தொடங்கப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துள்ளன. நாங்கள் எங்களது பாதையில் சரியான திசையில் சென்றுகொண்டு இருக்கிறோம். அதிமுகவுடன் இணையும் எண்ணம் எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை
“காவிரி நீர் விவாகரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரிடம் சோனியா காந்தி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசி தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தரவேண்டும்.
“ஏனென்றால் கர்நாடகாவில் ஆட்சி செய்வது காங்கிரஸ் கட்சிதான். தொடர்ந்து கர்நாடகாவிற்கு அழுத்தம் கொடுத்து தண்ணீர் பெற்றுத் தர வேண்டும்.
“மாறாக, டெல்லியில் போய் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.
தொடர்புடைய செய்திகள்
“நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டோம். பல தொகுதிகளில் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன.
“பணத்தை நம்பாமல் மக்களை நம்பி போட்டியிட்டோம். இதேபோல் வருகின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்,” என்றார் தினகரன்.