வெளி மாநிலப் பதிவு எண் கொண்ட பேருந்துகள் இயங்க தமிழக அரசு தடை

வெளி மாநிலப் பதிவு எண் கொண்ட பேருந்துகள் இயங்க தமிழக அரசு தடை

2 mins read
f0e70384-2cf1-42c6-b222-192e62880bb2
ஜூன் 14ஆம் தேதி முதல் வெளி மாநில பதிவு எண்களைக் கொண்ட தனியார் பேருந்துகள் தமிழ் நாட்டில் செயல்பட போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: வெளி மாநிலப் பதிவு எண்களைக் கொண்ட தனியார் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்குவதற்கு 14.6.2024ஆம் தேதி முதல் அனுமதி இல்லை என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

தடையை மீறி இயங்கும் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தத் தடையை அமல்படுத்துவதற்கு முன்னர் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் போக்குவரத்துத் துறையிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால், தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை போக்குவரத்து ஆணையர் சண்முகம் நிராகரித்துள்ளார்.

கேரளா, கர்நாடகா, அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட தனியார் பேருந்துகள் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சேவையாற்றி வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், நோன்புப் பெருநாள் போன்ற திருநாள் காலங்களில் பெருநகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குச் செல்வோர் தனியார் பேருந்துகளையே நாடுகின்றனர்.

ரயில் போக்குவரத்து இல்லாத ஊர்களைச் சேர்ந்தோரும் தனியார் பேருந்துகளையே நாடுகின்றனர்.

இதுபோன்ற பயணிகளுக்காக தமிழகத்தில் ஏராளமான தனியார் பேருந்துகள் சேவையாற்றி வருகின்றன.

இந்நிலையில் வெளி மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட பேருந்துகள் இதுபோன்ற உள் சேவைகளில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

எனினும் பயணிகளைப் பொறுத்தவரை எந்தப் பேருந்தாக இருந்தாலும் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டையே பின்பற்றுகின்றனர். எனவே, அவர்களில் ஒரு தரப்பினர் இந்தத் தடை தேவையில்லை என்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்